நெல்லை: சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பொட்டல் கீழநத்தம், மணப்படை வீடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக நான்கு வழி சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழப்பதால் தங்களுக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
சாலைமறியல்
அண்மையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சுடலையாண்டி என்பவர் உயிரிழந்தார். இதனால் ஆததிரம் அடைந்த பொதுமக்கள் நான்கு வழிச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெண்கள் குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
சிலர் காவல்துறையின் பேச்சுவார்த்தை ஏற்காமல் சாலையின் நடுவே நின்று கோஷம் எழுப்பவே காவல்துறை அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இருப்பினும், சாலை ஓரமாக நின்றபடி பொதுமக்கள் கண்டன கோஷம் எழுப்பினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், பொட்டல் கீழநத்தம், மணப்படை வீடு உட்பட சுற்றுவட்டாரத்தின் பல ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாளையங்கோட்டை மார்க்கெட் செல்வதற்கு இது தான் பிரதான வழியாக உள்ளது.
மாற்றுப்பாதை வேண்டும்
ஆனால், நான்கு வழிச்சாலையைகடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, இங்கு மாற்றுப் பாதை அமைத்துத் தரும்படி போராடி வருகிறோம்.
இருப்பினும் அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு உடனடியாக மாற்றுப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் நிபந்தனையுடன் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு