திருநெல்வேலி: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (நவ.07) நெல்லை மாவட்ட மழைப் பாதிப்பு குறித்து நேரில் அவர் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், 'மழை நேரத்தில் வீடுகளுக்குள் நீர் செல்லாமல் இருக்கப் பல்வேறு பணிகள் நடந்து வருவதை ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
வரும் 9 ,10 ஆகிய தேதிகளில் அதிக கனமழை இருக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் அதனை எதிர்கொள்ளவும் அரசு தயார் நிலையில் உள்ளோம்.
கன மழை பெய்தாலும் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
தீபாவளிக்குப் பின்பு ஊர் திரும்ப 17,719 பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் அதிக மழை பெய்துள்ளதால் இரு நாட்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தீபாவளி சிறப்புப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்.
உரிய பேருந்துகள் வசதி
தற்பொழுது, மழை காரணமாக சென்னைக்கு வர இயலாமல் நடுவழியில் தவிப்பவர்கள், மீண்டும் ஊர் திரும்பத் தேவையான பேருந்துகள் இயக்கப்படும்.
தமிழ்நாட்டில் 1600 ஆம்னிப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தைப் பயன்படுத்தி விதிமீறல் செய்த 7 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து தொடர்பாக புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் காலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
இதையும் படிங்க:மழையால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினருக்கு உத்தரவு