திருநெல்வேலி தொடர் மழையால் அணைகளில் இருந்து பல ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய போக்குவரத்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள போக்குவரத்து பாலம் வெள்ளத்தில் மூழ்கும் நிலையில் இருந்ததையடுத்து அங்கு கடந்த இரண்டு தினங்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அதேபோல் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையிலும் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேரன்மகாதேவியிலிருந்து நெல்லை டவுன் மற்றும் பேட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதேபோல் முக்கூடலிலிருந்து டவுன் மேலப்பாளையம் விக்ரமசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் தற்போதைய நிலையில் மழை குறைந்துள்ளதால் சேரன்மகாதேவியில் போக்குவரத்து சீராகி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் சென்று கொண்டிருப்பதால் பஸ் போக்குவரத்து தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதர வாகனங்கள், இருசக்கர வாகனம், லாரி, கார் போன்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் முக்கூடல் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து தவிர பிற வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு போக்குவரத்து சீராகி வருகிறது.
இதையும் படிங்க:
தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்... களத்தில் இறங்கிய மீட்புக் குழு!