குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய ஏழு பெயர்களில் அழைக்கப்படும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கி, ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கும், சாதி சான்றிதழ் பெறுவதற்கும் அரசு ஆணை பிறப்பிக்க கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசாணை வெளியிடும் வரை மேற்கண்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும், தங்கள் வீடுகளில் தினமும் கருப்புச்சட்டை அணிந்து போராட வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று பாளையங்கோட்டை அருகே ஜான் பாண்டியன் தலைமையில் கருப்புச்சட்டை அணியும் போராட்டத்தின் 325 நாளை வெளிப்படுத்தும் வகையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், ” ஏழு பிரிவினரை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க அரசாணை வெளியிடக் கோரி, கடந்த 325 நாட்களாக கருப்புச்சட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகிறோம். பெரும்பாலும் விவசாயத் தொழிலை நம்பியுள்ள மக்களின் இக்கோரிக்கையை வெளிப்படுத்தவே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எனவே, விரைவில் எங்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் ” என்று கூறினார்.
இதையும் படிங்க: தனியார் கல்லூரி எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டில் அநீதி - ராமதாஸ்!