தமிழ்நாட்டில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஏழு உள்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிடக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கைவைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்செய்தது.
இது குறித்து நேற்று (பிப். 23) நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், “ஏழு உள்பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் காஞ்சிபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புஷ்ப பல்லக்கு விழா நடத்திவந்துள்ளனர்.
தற்போது அந்த விழா நடைபெறாததால் நான் காஞ்சி மடத்துக்குச் சென்று மீண்டும் புஷ்ப பல்லாக்கு விழா நடத்த மடாதிபதியிடம் கோரிக்கைவைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று வரும் மார்ச் 8ஆம் தேதி காஞ்சிபுரத்தில் புஷ்ப பல்லக்கு விழாவில் எங்களுக்கு முதல் மரியாதை கிடைக்க உள்ளது. இதை மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கோயில்களிலும் எங்களுக்கு முதல் மரியாதை கிடைக்க முயற்சிகளை எடுப்போம். பட்டியலினத்திலிருந்து நீக்குவது தொடர்பாக உரிய ஆய்வுகள் மேற்கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
அதற்காகவும் நான் பிரதமரைச் சந்திக்க உள்ளேன். தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்பது 40 ஆண்டுகளாக கோரிக்கையாகும். பிரதமர் மோடி இது தொடர்பாக மேடையில் பேசியிருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகிறோம்.
இது சாதாரண போராட்டம் அல்ல. சுமார் 469 நாள்களாக கறுப்புச் சட்டை அணிந்து அகிம்சை வழியில் போராடி வெற்றிபெற்றுள்ளோம். இதற்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அவர்களுக்கு நாங்கள் ஓட்டுச்சீட்டு வழியாக நன்றி தெரிவிப்போம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஒப்பாரிவைத்து போராட்டம்