திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயில் திருவாதிரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(டிச.29) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நடராஜர் சன்னதியிலிருந்து சப்பரத்தில் அழைத்துவரப்பட்டு தேரில் அமர்த்தப்பட்டார். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு தேர் திருவிழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிவ கோஷம் முழங்க வடத்தை பிடித்து தேரை இழுத்தனர். குறிப்பாக பெண்களே அதிகளவில் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
திருநெல்வேலி, மதுரை, திருவாலங்காடு, சிதம்பரம், குற்றாலம் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள சிவாலயங்களில் நடராஜர் தன் நடனத்தால் சிறப்பித்த சபைகள், பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி பொற்சபை சிதம்பரத்திலும், சித்திரசபை தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும், ரத்தின சபை திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டிலும், வெள்ளி சபை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தாமிரசபை திருநெல்வேலி மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலிலும் அமைந்துள்ளது.
திருநெல்வேலி தாமிரசபை இம்மாவட்டத்தின் அருகே எட்டு கி.மீ., தொலைவில் உள்ள ராஜவல்லிபுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்த பஞ்ச சபைகளில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பெண்கள் தேர் இழுத்தால் அவர்களின் வாழ்வில் உள்ள பிரச்னைகள், பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். தொடர்ந்து நாளை(டிச.30) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. கரோனா காலம் என்றாலும் கூட திரளான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் தேர்த் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!