நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அரசு ஊழியர்கள், காவலர்கள் ஆகியோர் தேர்தல் பணியாற்றச் செல்ல இருப்பதால் அவர்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு அங்கமாக நெல்லை அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்த நிலையில், தற்போது காவலர்கள் தங்களுக்கான தபால் வாக்குப் படிவங்களைப் பெற்று தபால் வாக்கைப் பதிவு செய்து வருகின்றனர்.
நெல்லை மாநகர் பகுதியில் காவல்துறையினர் 1,500 பேர் தபால் வாக்குகள் பதிவு செய்கின்றனர், இதுபோன்று ஊர்காவல் படையினர் 1000 பேரும் பதிவு செய்கின்றனர். இதற்காகப் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியில் சிறப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காவலர்கள், ஊர்காவல் படையினர் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாவட்ட காவல்துறையினருக்கு வரும் 15ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.