திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் தை அமாவசையை முன்னிட்டு ஆண்டுதோறும் மூன்று நாள்கள் திருவிழாவாக பத்திர தீப திருவிழா நடைபெறும்.
அந்த வகையில் இந்தாண்டு பத்திர தீபத் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் நேற்று (பிப். 10) தொடங்கியது. காலையில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. இரவில் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள விநாயகர் முன்பு தங்க விளக்கு வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து நெல்லையப்பர் சன்னதிக்கு விளக்கு எடுத்து செல்லப்பட்டு சுவாமி முன்னால் தங்க விளக்கில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்ட தங்க விளக்கு கோயிலை வலம்வந்து சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பீடத்தில் நிறுவப்பட்டது. மணிமண்டபத்தில் தங்க விளக்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
இந்நிலையில் தை அமாவாசை நாளான இன்று (பிப். 11) தங்க விளக்கின் மகா தீபத்திலிருந்து கோயில் தங்க கொடிமரம் முன்பு அமைக்கப்படும் நந்தி தீபம் ஏற்றப்படும். அதனைத்தொடர்ந்து கோயில் முழுவதும் பத்தாயிரம் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.
பின்னர் இரவு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும், சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும் 63 நாயன்மார் மரகேடயத்திலும் வீதி உலாவருவார்கள்.
இதையும் படிங்க...காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் சசிகலா - அமைச்சர் ஜெயக்குமார்