திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நிருபர் காலனியைச் சேர்ந்தவர் ஜானகி. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் நாராயண பிரசாத் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சூழ்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன.
இதனால் வீட்டில் முடங்கிய நாராயண பிரசாத்துக்கு அவரது தாய் ஜானகி தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
தாய் மகன் இருவரும் தலா ஒரு சிறுநீரகத்துடன் வாழ்ந்து வந்தனர். அன்பை போதிக்கும் ஆசிரியராக இருப்பதால், கரோனா காலத்தில் ஆதரவில்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு அன்புக்கரம் நீட்ட ஜானகி முடிவு செய்தார்.
முழு ஊரடங்கு நேரத்தில் தினமும் சாலையில் ஆதரவில்லாமல் இருக்கும் மக்களுக்கு தாய், மகன் சேர்ந்து இலவசமாக உணவு சமைத்து கொடுத்து வந்தனர்.
நாராயண பிரசாத்தும் சாம்பார் சாதம், தயிர் சாதம் என நாள்தோறும் விதவிதமாக சமைத்து அதை தன்னார்வலர்கள் மூலம் ஆதரவற்றவர்களுக்கு வழங்கிவந்தார்.
சிறுநீரக பாதிப்பால் வேலைக்கு செல்லவில்லை என்றாலும்கூட கிடைக்கும் வருமானத்தை வைத்து இல்லாதவர்களுக்கு உதவுவதில் பெரும் மனநிறைவு ஏற்படுவதாக நாராயண பிரசாத் தெரிவித்தார்.
அதேபோல் ஒரு சிறுநீரகம் இல்லாமல் உடல்நிலை சரிவர ஒத்துழைக்காதபட்சத்தில் ஆத்ம திருப்திக்காக இந்தப் பணியை செய்துவருவதாக ஜானகியும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் சிறுநீரக பாதிப்பிலிருந்து போராடி தனது மகனை காப்பாற்றிய ஜானகி தற்போது கரோனா பாதிப்புக்கு அவரை பறிகொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சில நாள்களுக்கு முன்பு நாராயண பிரசாத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை கேள்விப்பட்டு ஜானகி மனம் உடைந்து சோகத்தில் மூழ்கினார். சிறுநீரகத்தை இழந்தபோதிலும் இல்லாதவர்களின் பசியை ஆற்றி வந்த நாராயண பிரசாத்தின் உயிரிழப்பால் தன்னார்வலர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.