மதுரை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன், முத்துராஜன், சிவராமன், லட்சுமணன், கணேஷ் மாரிமுத்து, சங்கர் மாரிமுத்து, ஸ்ரீனிவாஸ் மாரிமுத்து, ஹரிஹரன் மாரிமுத்து ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவு செய்திருக்கும் வழக்கில்,
தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், "இந்த வழக்கைப் பொறுத்தவரை நெருங்கிய உறவினர்களுக்கு இடையேயான சொத்து பிரச்னை தொடர்பான வழக்கு வகையிலேயே வருகிறது. ஏவிஎம் மாரிமுத்து நகை தொழில் செய்து வந்த நிலையில், அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் அதே தொழிலை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தையே போதும்
1985ஆம் ஆண்டு "Subramaniyan and brothers" எனும் பெயரில் கட்டுமானப் பணிகள், கட்டடங்களை குத்தகைக்கு (LEASE) எடுப்பது, அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் அமைத்துக் கொடுப்பது, திருமண மண்டபங்களைக் கட்டி கொடுப்பது உள்ளிட்ட பணிகளையும், ரியல் எஸ்டேட் பணிகளையும் இணைந்து மேற்கொண்டு வந்துள்ளனர்.
தந்தையின் இறப்பிற்குப் பிறகு சொத்துகளைப் பிரிப்பதில் ஒரு சாரார் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்கள், அவற்றில் கிடைக்கப்பெற்ற லாபங்களைப் பிரிப்பதிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தையில் தீர்க்கக் கூடிய பிரச்னையாகவே உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரனை நியமித்து இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஒப்படைப்பு
இதுதொடர்பான தகவலை உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரனிடம் தெரிவிக்கவும்; வழக்குத் தொடர்பான ஆவணங்கள், உத்தரவுகளை அவருக்கு வழங்கவும் பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
மேலும் ஒவ்வொரு விசாரணைக்கும் 25 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும். இருதரப்பினரும் இந்த கட்டணத்தைப் பகிர்ந்து வழங்க வேண்டும்.
நீதிபதியின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதுவரை, ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.