வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புரெவி புயல் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் ஐஏஎஸ் இன்று (டிச. 02) புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், மாவட்டம் முழுவதும் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இடங்களில் உரிய முன்னெசரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என கருணாகரன் அறிவுறுத்தினார்.
பின்னர் பேசிய கருணாகரன், “புயலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கடற்கரைப் பகுதியில் உள்ள அனைத்துப் புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன.
வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புயல் மீட்புப் பணிக்காக 633 முன்களப் பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்துக் குளங்களிலும் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க...புரெவி புயல்: பாம்பன் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்