திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழில் அதிபர் வைகுண்டராஜன். இவர், 'வி.வி. மினரல்' என்ற பெயரில் நிறுவனம் நடத்திவருகிறார். ஏற்கனவே இவர் மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில், தாது மணல் எடுத்து விற்பனை செய்வதாகப் பல்வேறு சர்ச்சைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தொழில் அதிபர் வைகுண்டராஜன், தனது சகோதரர் மகன் செந்தில்குமார் தன்னை கடத்தி கொலைசெய்ய முயற்சி செய்வதாக இன்று நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் பரபரப்பு புகார் அளித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "எனது சகோதரர் மகன் செந்தில்குமார், அவரது நண்பர்கள் 15 பேருடன் சேர்ந்து தினமும் என்னை கண்காணித்துவந்தார். நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் பின்தொடர்ந்து என்னை வீடியோ எடுத்துவைத்துள்ளார்.
நேற்று என்னைப் பின்தொடர்ந்தபோது, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையரிடம் ஒப்படைத்தேன். அவர்களின் மொபைலிலிருந்து 35 வீடியோக்களைக் கைப்பற்றியுள்ளேன்.
உதவி ஆணையர் பாளையங்கோட்டை காவல் நிலைத்தில் குற்றவாளிகளை ஒப்படைத்தார். ஆனால் பாளையங்கோட்டை காவல் துறையினர் நான் பிடித்துக் கொடுத்த குற்றவாளிகளை விட்டுவிட்டனர். என்னை காரில் கடத்திக் கொலைசெய்ய முயற்சித்தனர்.
முன்னெச்சரிக்கையாக நான் குற்றவாளிகளைப் பிடித்துக்கொடுத்தும் காவல் துறையினர் அவர்களை விட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. இரண்டு காவல் ஆய்வாளர்கள், ஒரு அதிகாரி மீதுதான் குறை சொல்கிறேன். இது குறித்து புகாருக்கு, நான்கு நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக டிஐஜி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடல்நலக் குறைவால் பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி!