திருநெல்வேலி: டவுன் சாஃப்டர் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியாகினர். மேலும், ஐந்து மாணவர்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே இந்த விபத்து நிகழ்ந்ததாக பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்வி, தாளாளர் சாமுவேல் செல்வகுமார் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பணியிடை நீக்கம்
இந்நிலையில், பள்ளி விபத்து சம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞான செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் சுதாகர் அருள் டைட்டஸ் மற்றும் ஜேசு ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சாஃப்டர் பள்ளி தென்னிந்திய திருச்சபை திருமண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, திருமண்டலம் சார்பிலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியின் தாளாளர் சாமுவேல் செல்வகுமாரை அந்த பதவியிலிருந்து தென் இந்திய திருச்சபை நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரண தொகையும் காயம்பட்டவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையும் வழங்கப்படவுள்ளதாக தென்னிந்தியத் திருச்சபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி