நெல்லை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தென் மாவட்டங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி - கேடிசி நகர்ப் பகுதியில் வாக்குச்சேகரிப்பில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'நெல்லை அதிமுகவின் கோட்டை ஆகும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கவர்ச்சிகரத் திட்டங்களை அறிவித்து பேச்சாற்றல் மூலம் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்த எட்டு மாத ஆட்சியில் திமுக என்ன நன்மைகள் செய்தார்கள் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பொய் பேசுவதற்குப் பட்டம்
ஏற்கெனவே, நமது ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களைத் தான் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். புதிய திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. தேர்தல் அறிக்கையில் சுமார் 525 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 200 அறிவிப்புகளை நிறைவேற்றியதாக மு.க.ஸ்டாலின் தெரிவிக்கிற அத்தனையும் பொய்.
பொய் பேசுவதற்குப் பட்டம் கொடுக்க வேண்டுமென்றால், அது மு.க.ஸ்டாலினுக்குக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். பொய் பேச நோபல் பரிசு கொடுப்பார்கள் என்றால், மு.க.ஸ்டாலினுக்கு தான் அது பொருத்தமாக இருக்கும்' என்று விமர்சித்தார்.
மேலும் அவர் 'எல்லா குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை எண்ணிப் பார்த்த பெண்கள், கடந்த தேர்தலில் நமக்கு வாக்களிக்காமல் எதிர் அணிக்கு வாக்களித்தார்கள். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
வீணான நெல் மூட்டைகள்
நகைக்கடன் தள்ளுபடி என்றதும் திமுக பேச்சை நம்பி பெண்கள் தங்கள் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்தார்கள். ஆனால், தற்போது தகுதியானவர்களுக்குத் தான் தள்ளுபடி என்கிறார். இதைத் தேர்தலுக்கு முன்பு சொல்லியிருக்க வேண்டும்; வாக்குகளைப் பெறுவதற்காகக் கவர்ச்சியாகப் பேசி பெண்களை ஏமாற்றி விட்டார்.
48 லட்சம் பேர் கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்றுள்ளனர். அதில் 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் என்று அரசு கூறுகிறது. அப்படியென்றால் மீதமுள்ள 35 லட்சம் பேர் ஏமாந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பித்தலாட்ட அரசு
எனவே, திமுகவுக்கு ஓட்டுப் போட்ட 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு பித்தலாட்ட அரசு என்று எண்ணிப் பாருங்கள்.
திமுக அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை சரிவரக் கொள்முதல் செய்யாததால் தமிழ்நாடு முழுவதும் மூன்று லட்சம் நெல் மூட்டைகள் வீணாகிவிட்டன. இதையெல்லாம் யாரும் கேட்கவில்லை.
இதற்காக, எந்த விவசாயிகளும் போராடவில்லை. 2,500 ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்தபோது, ஏன் ஐந்தாயிரம் கொடுக்கக் கூடாதா என மு.க.ஸ்டாலின் கேட்டார். இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை’ என்றார்.
ரூ.500 கோடி ஊழல்
அதேபோல் அவர், 'திமுக அரசு பொங்கல் பரிசு தரமாகக் கொடுக்கவில்லை. பொங்கல் தொகுப்பில் திமுக அரசு ரூ.500 கோடி ஊழல் செய்து மக்கள் வயிற்றில் அடித்துள்ளனர்.
விஞ்ஞான ஊழல் செய்து வருகிறார்கள். ஏற்கெனவே கண்ணில் தெரியாத காற்றில் ஊழல் செய்தவர்கள். உணவுப் பொருளில் கொள்ளையடித்த ஒரே கட்சியினர் திமுகவினர் தான்.
ஊழலுக்காகவே பொங்கல் தொகுப்பு கொடுத்துள்ளனர். மக்களுக்காகக் கொடுக்கவில்லை.
'நீட்' தேர்வை எதிர்த்த அதிமுக
நீட் தேர்வைக் கொண்டு வந்தது, திமுகவும் காங்கிரசும். அதைத் தடுத்தது அதிமுக. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ரத்து என்றார்கள். ஏன் ரத்து செய்யவில்லை. சட்ட ரீதியாக சென்றால் தான் நீட் ரத்து செய்ய முடியும். இதை ஆராய்ந்து தீர்வு காண்பதை விட்டு எங்கள் மீது பழி போடக் கூடாது.
ஏழை மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதனால் இந்தாண்டு 554 பேர் மருத்துவராக உள்ளனர்' என்று கூறினார்.
பரப்புரையின் தொடர்ச்சியாக மேலும் பேசிய போது, ’நெல்லை மாநகராட்சியில் 990 கோடியில் பல திட்டங்களைக் கொண்டு வந்தோம். அதில் சுமார் 35 பணிகள் நிறைவேறியுள்ளது; மீதியுள்ள பணிகளை நமது மேயர் வந்தால் தான் நிறைவேற்ற முடியும்.
இது சாதாரண தேர்தல். எனவே, இந்தத் தேர்தல் வெற்றி திமுகவுக்குப் பாடமாக அமைய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'கோயில் நிலங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு அலுவலர்களே பொறுப்பு' - உயர் நீதிமன்றம்