திருநெல்வேலி: நாங்குநேரியை அடுத்த மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவருடைய மகன் சாமி துரை. 25 வயதான இவர் தந்தையின் விவசாய நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே இவர் மீது கொலை, அடிதடி வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்பகுதியில் ரவுடியாகவே வலம் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
தொடர்ந்து பல்வேறு அடிதடி வழக்குகளில் சிக்கியதால், இவரை காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 30 நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து இவர் விடுதலையானார். இதனையடுத்து சாமி துரைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளியே திண்ணையில் படுத்திருந்த சாமிதுரயை, மர்ம நபர்கள் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சாமிதுரை உயிரிழந்து விட இதுகுறித்த தகவல் அதிகாலையிலேயே அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
உறவினர்கள் ஊர் பொதுமக்கள் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக பழிக்கு பழியாக இவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், நான்கு அல்லது ஐந்து பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு - ஒருவர் பலி