திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோ என்பவர் பிற கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதில், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் நேற்று(ஏப்.22) பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க சென்றபோது, அங்கிருந்த பிற கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று(ஏப்.22) மாலை சிகிச்சை பலனளிக்காமல் முத்து மனோ உயிரிழந்தார்.
இச்சம்பவம் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாதி மோதல்கள் காரணமாகவே முத்து மனோ சிறையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில் முத்துமனோ கொலை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று(ஏப்.23) அவரது உறவினர்கள், குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைச்சாலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு கருதி, பாளையங்கோட்டை பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சாலை மறியல் நடைபெறும் இடத்தில் அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர காவல் துணை ஆணையர்கள் நேரில் வந்து மறியல் செய்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சாலை மறியலை முன்னிட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!