அனல்மின் நிலையம், அனுமின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின் நிலையம், சூரிய ஒளி மின் நிலையம் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு மின்வாரியம் மின்சார உற்பத்தியை செய்து வருகிறது. ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களிலும், புயல் ஏற்படும் நேரத்திலும் ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்கள் சேதமடைவதால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும். அந்த வகையில், சமீபத்தில் நிவர், புரெவி புயல் ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமபுறங்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா என்பது குறித்து ஈடிவி பாரத் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 11 லட்சம் மின் நுகர்வோர்கள் உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பியுள்ளன. மழைநீரால் மின் வயர் பழுதாகுவதாலும், மின் கம்பங்கள் சேதமடைவதாலும் கிராமப்புறங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. அந்த வகையில், திருநெல்வேலியில் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான கிராமங்களில் நாள்தோறும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், சில கிராமங்களில் வழக்கம்போல் மின் தடை இல்லாமல் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதியாகும். இங்கு, சுமார் 86,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மின் தடையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது, சில நேரங்களில் அரை மணி நேரம் மின் தடை ஏற்படுவது வழக்கம் தான் எனவும், மீண்டும் மின்சாரம் வழங்கப்படுவதாகவும் பெரும்பாலான விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சேத்தி மங்கலம் கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் அலுவலர்கள் வராதபட்சத்தில் தாங்களே ஆள் வைத்து மின்சாரத்தை சரி செய்து கொள்வதாகவும் கூறுகிறார், சேத்தி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி.
தங்கள் பகுதியில் மின்தடை பெரிய பிரச்னையாக இருப்பதாகவும், இது தொடர்பாக மின் வாரியத்திடம் புகார் அளித்தால் யாரும் வருவதில்லை என்றும் வேதனை தெரிவிக்கும் சேத்தி மங்கலத்தைச் சேர்ந்த சுமதி, தங்களுக்கு விவசாயம் தான் பிரதான தொழில், இதை நம்பித்தான் தங்களது வாழ்வாதாரம் இருப்பதாக புலம்புகிறார்.
4500க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் பாப்பாக்குடி கிராமத்தில், நாள்தோறும் ஒரு மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாகவும், ஒரு சில வீடுகளில் தற்போது வரை மின்சார விநியோகம் இல்லை என்று கூறும் விவசாயிகள், உடனடியாக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.