கரோனா தொற்று ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் 70 நாள்களுக்கு மேலாக தொழிலுக்கு செல்லமுடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ், டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கூடி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்காததால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம். எனவே திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளை அனைத்து விதிமுறைகளுக்கும் உள்பட்டு தேவையான தகுந்த இடைவெளியை பின்பற்றி நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
இதன் மூலம் திருமணம் சார்ந்த தொழில் செய்து வரும் டெக்கரேட்டர்கள் , ஒளி,ஒலி அமைப்பாளர்கள் பந்தல், மேடை அமைப்பாளர்கள் , சமையல் கலைஞர்கள், ஃபோட்டோ வீடியோ கலைஞர்கள், பூ வியாபாரிகள் என இந்த தொழிலை நம்பியிருக்கும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். இதற்காகவே 50க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் டெக்கரேஷன் பொருள்கள், ஒலிபெருக்கி ஆகியவற்றுடன் வந்தோம்.
மேலும் 70 நாள்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்தக்கட்டமாக நடைபயணமாக சென்று முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றனர்.