மதுரை : திருச்செந்தூரிலிருந்து அம்பாசமுத்திரம் வரை சாலையோர மரங்களை வெட்டுவதற்கு முன்சாலையோரம், வெட்டப்பட இருக்கின்ற மரத்திற்கு பதிலாக, ஒரு மரத்திற்கு பத்து மரங்கள் வீதம் சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்ற இடத்தில் நட்டு வளர்த்து, அதன்பின்பு சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “மொத்தமாக மரங்களை வெட்டினால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
உடன்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி போகும் சாலையில்சாலையின் ஓரங்களில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட பிரிவின் கீழ் திருச்செந்தூரிலிருந்து பாளையங்கோட்டை வழியாக அம்பாசமுத்திரம் வரை சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 3 ஆயிரம் மரங்களுக்கு மேல் வெட்டப்படுகிறது.
இயற்கை ஆக்சிஜன் தொழிற்சாலை
தரமான, சுத்தமான, இயற்கையான இலவசமான ஆக்சிஜனை தரும் தொழிற்சாலைகளாக விளங்கிவரும் பழமையான மரங்களை வெட்டுவது ஏற்புடையது அல்ல.
திருச்செந்தூர் தொடங்கி அம்பாசமுத்திரம் வரை 3 ஆயிரம் மரங்களை வெட்டுவது என்பது ஒரு காட்டினை அழிப்பதற்கு சமமாகும். மரங்களை முழுவதும் வெட்டாமல், ஒரு மரத்தை ஓரிடத்திலிருந்து அகற்றி மற்றொரு இடத்தில் மாற்றி வைக்கலாம்.
3 ஆயிரம் அல்ல ஆயிரம்தான்...
மரங்களை இடமாற்றம் செய்வது சாத்தியமில்லை எனக் கருதினால், மரம் வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அல்லது உயர்நீதிமன்ற உத்தரவுபடி, வெட்டப்பட இருக்கின்ற மரத்திற்கு பதிலாக ஒரு மரத்திற்கு பத்து மரங்கள் வீதம் சாலை விரிவாக்கப்படுகின்ற இடத்தில் நட்டு வளர்த்து அதன்பின்பு, சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “மனுதாரர் கூறுவது போல், நாங்கள் 3 ஆயிரம் மரங்கள் வெட்டவில்லை. 1,093 மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளது. அதுவும் பகுதி பகுதியா தான் வெட்டப்பட உள்ளன” எனக் கூறினார்.
நீதிபதிகள் கருத்து
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்தத் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது உரிய அளவு மரக்கன்றுகள் வைத்து பராமரித்து இருக்கலாம், தற்போது வரை மரக்கன்றுகள் வைக்கவில்லை.
மேலும் மொத்தமாக மரங்களை வெட்டினால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்வோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள்.
எனவே, இது குறித்து சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட பிரிவு இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : மரம் நடும் விழாவிற்கு மதுரை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு தாக்கல்