திருநெல்வேலி: மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையத்துடன் இணைந்து பெரியாரும் இஸ்லாமும் என்ற தலைப்பில் வரும் 27ஆம் தேதி பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஷ் அகமது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்ற இருப்பதாக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் சாமுவேல் ஆசீர் ராஜ் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உள்ளார். இந்த சூழ்நிலையில் பெரியார் தொடர்பான இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் இன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர்கழக அலுவலகமா? ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி கூடாரமா? புரியவில்லை 'பெரியார், சாமுவேல் ஆசீர்ராஜ், ரியாஸ் அகமது' என்னவிதமான கூட்டணி. கல்வி நிலையத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சியா?
அக்டோபர் 27ஆம் தேதி காவிகள் நாம் அணிதிரள்வோம். என்ன பேசுகிறார்கள் என பார்ப்போம். கடவுள் மறுப்பு, இஸ்லாத்தின் சமூகநீதி என அனைத்திற்கும் எதிர் கேள்வி மற்றும் விளக்கம் கேட்போம்" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் நேரடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரை தொடர்புகொண்டு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்து முன்னணியினரின் எதிர்ப்புக்கு அஞ்சும் வகையில் தற்போது பெரியார் தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெரிந்து கொள்வதற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியை தொடர்புகொண்டு கேட்டபோது, "இந்த கருத்தரங்கு நடைபெற்றால் சில பாதிப்புகள் ஏற்படும் என்ற சூழல் நிலவுகிறது. இன்றுதான் இந்த நிகழ்ச்சிக்கு சில எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கவில்லை. உரிய ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
துணைவேந்தரின் இந்த பதிலை பார்க்கும்போது, இந்து முன்னணியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக பெரியார் நிகழ்ச்சி நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தயக்கம் காட்டி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் தான் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தது. இதுபோன்ற சூழ்நிலையில் முழுக்க முழுக்க அரசு கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தில் பெரியார் தொடர்பான சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தயக்கம் காட்டி வருவது சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுப. உதயகுமார் ட்வீட்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பச்சை தமிழகம் கட்சி தலைவர் சு.ப உதயகுமார், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமா? திராவிடர் கழக அலுவலகமா? ஐஎஸ் பயிற்சி கூடாரமா? என்றெல்லாம் உருட்டி மிரட்டி, ஓர் அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தடுக்க முயலும் இந்து முன்னணி பாசிஸ்டுகளை வன்மையாக கண்டிப்போம்! பல்கலைக்கழக நிர்வாகமே முதுகெலும்புடன் செயல்படு!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தந்தங்கள் இன்றி கண்டுபிடிக்கப்பட்ட ஆண் யானை உடல் - கோவை வனசரகத்தில் பரபரப்பு