தேர்தல் தேதி, கூட்டணி, தொகுதி பங்கீடு என எதுவுமே இன்னும் முழுமை பெறாத நிலையில், ஒரு கட்சியில் வேட்பாளரே அறிவிக்கப்பட்டுள்ளார். பனங்காட்டு படை என்ற கட்சியின் சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவரான இவர், கழுத்து மற்றும் கைகளில் கிலோ கணக்கில் நகைகள் அணிந்தபடி, காதில் ப்ளூடூத்துடன் பொது இடங்களில் காமெடியாக வலம் வருவார்.
குறிப்பாக, சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் காரசாரமாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வரும் ஹரியை வைத்து, இளைஞர் பட்டாளம் பல்வேறு காமெடி மீம்ஸ்களை வெளியிடும். அந்த வகையில் அவர்களின் வெறும் வாய்க்கு தீனியாக, மேலும் ஒரு கன்டென்டை ஹரி அள்ளிக்கொடுத்துள்ளார். அது என்னவெனில், “ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடப் போகும் என்னை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடியே போட்டியிட்டாலும் பின்வாங்க மாட்டான் இந்த ஹரி நாடார்” என்பதுதான்.
இது பல்வேறு தரப்பிலும் பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கில் தொண்டர் பட்டாளத்தை கொண்ட அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை தனக்கு நிகராக ஹரி பேசியதை அவருடன் இருந்தவர்களே சற்று கிறுகிறுப்புடன் பார்த்தனர். அவர்களாலும் சிரிப்பை அடக்க முடியாவிட்டாலும் கூட, வேறு வழியின்றி வாழ்க வாழ்க கோஷத்துடன் கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாளை முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: 'தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் அதிமுக அரசு!'