திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் முத்து மனோ (27). இவர் வழக்கு ஒன்றில் கைதாகி இன்று (ஏப். 22) சிறைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே அங்கு கைதாகி சிறையில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், முத்து மனோவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர் தற்போது அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், சாதி மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாடார் சமூகத்தின் தலைவராக அறியப்படும் ராக்கெட் ராஜாவுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராக அறியப்படும் கண்ணபிரான் என்பவரின் தரப்பிற்கும் பல நாள்களாக மோதல் இருந்து வருகிறது.
சமீபத்தில் கண்ணபிரான் மீது காவல் நிலையத்தில் வைத்தே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இந்த சூழ்நிலையில் கண்ணபிரான் தரப்பினர் ராக்கெட் ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சில தினங்களுக்கு முன்பு ஆயுதங்களுடன் பணகுடி அருகே பதுங்கி இருந்ததாகவும் அது தொடர்பாக நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த ராக்கெட் ராஜா சிறையில் ஏற்கனவே உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் கண்ணபிரான் ஆதரவாளர்களை தாக்க உத்தரவிட்டதாகவும், அதன்பேரில், இந்த மோதல் சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சீவலப்பேரியில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் கோயில் பூசாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தற்போதுவரை உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சிறைக்குள் வைத்து கைதி சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.