திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதைக் கண்டித்து நேற்று (அக். 10) அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், பேசிய யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும், அரசு குறித்தும் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு சாட்டை துரைமுருகன் திருநெல்வேலி வழியாகச் சென்றபோது, நள்ளிரவில் மாநகர காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
நாதகவுக்கு ஆதரவாக
பின்னர், திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் சாட்டை துரைமுருகனை முறைப்படி தக்கலை காவலர்களிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து, தக்கலை காவலர்கள், அவரை பத்மநாபபுரம் நீதித் துறை நடுவர் (Judicial Magistratre) தீனதயாளன், முன்பு முன்னிறுத்தினர். இதையடுத்து, வரும் 25ஆம் தேதிவரை சிறைக் காவலில் வைக்க நீதித் துறை நடுவர் உத்தரவிட்டார்.
இதனால், சாட்டை துரைமுருகன் நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட உள்ளார். யூ-ட்யூபர் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பல்வேறு பொது மேடைகளில் பேசிவருகிறார்.
ஸ்டாலின் குறித்து கடும் விமர்சனம்
சில மாதங்களுக்கு முன்புகூட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் வினோத் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், சீமான் குறித்தும் விமர்சித்துப் பேசியதைக் கண்டித்து அவரை நேரில் சென்று மிரட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சாட்டை துரைமுருகன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக மீண்டும் சாட்டை துரைமுருகன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹெச். ராஜா, சீமான் அரசியலுக்குச் சாபக்கேடு - சொல்கிறார் ஜெயக்குமார்