திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அடுத்த வேப்பிலன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. இவர் சென்னையில் தங்கி திரைப்படங்கள் நடித்து வந்தார். திரைத்துறையில் முக்கியமான காமெடி நடிகர் என்று அறியப்படும் நெல்லை சிவா, இன்று தனது சொந்த ஊரான வேப்பிலன்குளத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
நெல்லை சிவா, சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதால், உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குச் சென்ற சிறிது நேரத்தில் சிவா பரிதாபமாக உயிரிழந்தார்
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நெல்லை சிவா. 1985ஆம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். பின்னர் சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவர், 1990களில் நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் வலம் வந்தார்.
வெற்றிக்கொடிகட்டு, சாமி, அன்பே சிவம், திருப்பாச்சி, கிரீடம் உளளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சிவா நடித்துள்ளார். மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடர் உள்பட சின்னத்திரையிலும் நடித்து வந்தார்.
குறிப்பாக வைகைப்புயல் வடிவேலு உடன் பல்வேறு படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார் நெல்லை சிவா. வடிவேலுவின் பிரபல காமெடியான கிணத்தைக் காணோம் காமெடியில் நெல்லை சிவா காவல் அதிகாரியாக நடித்திருப்பார். இந்த காமெடி தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டது.
தனது நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்து வந்த நெல்லை சிவா திருமணம் செய்துகொள்ளவில்லை.
நெல்லை சிவா திருநெல்வேலிக்கே உரிய நெல்லை தமிழில் பேசுவார். ஏலே என்று நெல்லை அடையாளத்தை திரைத்துறையில் பிரதிபலித்தவர். நெல்லை சிவா மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.