நெல்லை டவுன் பகுதியில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் ஆர்ச்சிலிருந்து அருணகிரி தியேட்டர் வழியாக தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
இந்தச் சாலை அமைப்பதற்காகத் தங்களது வேளாண் நிலத்தை மாநகராட்சிக்கு கிரையம் செய்து கொடுத்ததாகவும், ஆனால் ஏழு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தங்களுக்கான கிரையத் தொகையை நெல்லை மாநகராட்சி வழங்கவில்லை என்றும் நிலம் கொடுத்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.
இந்நிலையில் தங்களுக்குத் தொகை வழங்காததால் அடுத்த பதினைந்து நாள்களுக்குள் எங்கள் நிலத்தை மீட்டு, மீண்டும் அந்த இடத்தில் வேளாண்மை செய்யவுள்ளதாக நேற்று (பிப். 11) நிலம் கொடுத்த நபர்கள் சார்பில் சாலையோரம் விளம்பர பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வழக்கமாக அரசு சார்பில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்போது போதிய அவகாசம் கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அரசு மட்டும்தான் நோட்டீஸ் வழங்குமா நாங்களும் நோட்டீஸ் கொடுப்போம் என்பதைக் கூறும் வகையில், நெல்லையில் சாலையை அமைக்க நிலம் கொடுத்த நபர்கள், விளம்பர நோட்டீஸ் வைத்தது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஈடிவி பாரத் சார்பில் நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில், “மொத்தம் 12 நபர்கள் சாலை அமைப்பதற்கு இடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு 15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படும் எனத் தகவல் தெரிவித்துவிட்டோம்.
இருப்பினும் அவர்கள் ஏன் இதுபோன்று விளம்பரம் பேனர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. நிலத்திற்கான தொகையை உறுதிசெய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் இழப்பீடு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் 15 கோடி ரூபாய் அனைவருக்கும் நிலத்தின் அளவைப் பொறுத்து பிரித்து வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்யாணராமனுக்குக் கல்யாண சாப்பாடு ரெடி!