திருநெல்வேலி: திசையன்விளை நாடார் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேகா. இவர் தனது நிலத்திற்குப் பட்டா பெயர் மாற்றம் செய்ய தலைமை நில அளவையர் ஸ்டீபன் என்பவர் தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பட்டா மாற்றி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கண்ணீர் மல்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இது குறித்து சுரேகா பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, "திசையன்விளை கிராமத்தில் எனது தாயாருக்குப் பாத்தியப்பட்ட சுமார் 47 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை என் அம்மா செட்டில்மென்ட் ஆவணம் மூலம் எனக்குப் பாத்தியப்படுத்திக் கொடுத்தார். எனவே எனது தாயார் பெயரில் இருந்த தனிப் பட்டாவை எனது பெயருக்கு மாற்றம் செய்ய திசையன்விளை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்திருந்தேன்.
வட்டாட்சியருக்கு ரூ.5 லட்சம் கையூட்டு?
எனது மனு தலைமை நில அளவையர் ஸ்டீபன் என்பவருக்கு அனுப்பிவைக்கப்பட்டு பட்டா மாற்றம் செய்வது தொடர்பாக ஸ்டீபன் என்னை நேரில் தொடர்புகொண்டார். அப்போது அவர், 'நான் பணம் வாங்க மாட்டேன், ஆனால் வட்டாட்சியர் ஐந்து லட்சம் ரூபாய் கேட்பார்' என்று கூறினார்.
மேலும் என்னிடம் தகாதபடி நடந்துகொண்டார். நான் வேறு வழியில்லாமல் அவரை நம்பி கடந்த செப்டம்பர் 28ஆம் தேதியன்று திசையன்விளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஸ்டீபனிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன் அந்தப் பணம் தனக்கு இல்லை வட்டாட்சியருக்கு என ஸ்டீபன் கூறினார்.
ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்டு எனது வேலையை முடிக்காமல் பல நாள்கள் அலைக்கழித்தார் இது குறித்து கேட்டபோது என்னை மிரட்டினார். பணத்தைப் பற்றி கேட்கும்போதெல்லாம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்.
எனவே பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றி என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஸ்டீபன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்துள்ளேன்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
சுரேகாகாவின் தந்தை மாவட்ட தொழில் மையத்தில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க:ஐஐடி கான்பூர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் நரேந்திர மோடி