தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காளிப்பட்டி கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சாத்தாக்குட்டி. இவரது மனைவி லட்சுமி (27). இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருந்த நிலையில் 2017 டிசம்பர் 7ஆம் தேதி அன்று மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2018 பிப்ரவரி 14ஆம் தேதி அன்று லட்சுமி, தனது மூன்றாவது ஆண் குழந்தையைப் பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து துடிக்க துடிக்க கொலைசெய்துள்ளார்
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அருணாச்சலம் அளித்த புகாரின்பேரில், கடையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லட்சுமியைக் கைதுசெய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நீதிபதி நசீர் அகமது இன்று (ஜன. 05) தீர்ப்பளித்தார்.
அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட லட்சுமிக்கு ஆயுள் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.