நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் திமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அதில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் அவசியம் வெற்றி பெறுவோம். திராவிட கழகத்தைக் கொச்சைப்படுத்த பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்து மதத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக அவர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். ஏதோ தாங்கள்தான் இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து தெளிவாகச் சொல்லி இருக்கிறோம் .
கோவில் சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர். கோவில் சொத்தை பாதுகாக்க முக்கிய நடவடிக்கை எடுத்தவர், நமது தலைவர் கலைஞர், அதிக கோவில்களில் குடமுழுக்கு நடத்தியவர் கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.
மத்தியில் ஐந்தாண்டு கால ஆட்சி பொறுப்பில் இருக்கும் மோடி அவர்கள் வீட்டுக்குப் போக வேண்டும் அவரின் ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளில் அவர் அளித்த உறுதி மொழிகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு விட்டது என்று அவரால் கூற முடியுமா எடப்பாடி ஒரு விவசாயி என்று கூறுகிறார், அவர் ஒரு விவசாய நாட்டு மக்களின் பிரச்னையைத் தீர்த்து வைத்தாராம். ஆட்சி மாற்றம் வர திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தென்காசி தொகுதி வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொள்ள சங்கரன்கோவில் சென்றார்.