திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் இன்று 'பெரியாரும் இஸ்லாமும்' என்ற தலைப்பில் பகுத்தறிவு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் புதிய விடியல் இதழின் இணையாசிரியர் ரியாஸ் அகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "கடவுளே இல்லை என்று கூறிய பெரியார் எப்படி இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டார் என்ற கேள்வி எழலாம். சமூக முன்னேற்றத்திற்கும், கலாசாரம் முன்னேற்றத்திற்கும் ஒரு மதம் தடைபோடும் என்றால் அந்த மதம் வேண்டாம் என்று தான் பெரியார் சொன்னார்.
இது இல்லாமல் எந்த மதம் இருக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன் என்று பெரியார் சொன்னார். எனவே தீண்டாமை என்று சொல்லக்கூடிய புள்ளி தான் பெரியாரை இஸ்லாம் மதத்தோடு நெருக்கமாக்கியது. இஸ்லாமில் ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேற்றுமை இல்லை. எனவே இப்படிப்பட்ட மதத்தை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று பெரியார் சொன்னார்.
1947 ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் இன இழிவு ஒழிய இஸ்லாமிய நண்பன் என்ற தலைப்பில் பெரியார் பேசினார். இந்த இனத்துக்கான இழிவு ஒழிய வேண்டும் என்றால் அது இஸ்லாமால் மட்டும்தான் முடியும் என்று சொன்னார். இந்த மதம் தான் உங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் கண்ணியத்தை கற்றுக்கொடுக்கும் என்றார்.
பெரியாரை இஸ்லாமோடு ஒன்றாக இணைக்கும் புள்ளி இவைதான். பெரியாருக்கு முன்பே தீண்டாமையை எதிர்த்து யாரும் போராடவில்லையா என்று கேட்டால்; பலபேர் போராடினார்கள். அவர்கள் சட்ட ரீதியாகவும் சத்தியாகிரக ரீதியாகவும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்தப் போராட்டங்கள் தோல்வி அடைய அதிக வாய்ப்புகள் இருந்தன.
இது போன்ற பேசிக் கொண்டே இருப்பதால் திராவிடர் கழகத்திலிருந்தே பெரியாரை சிலர் எதிர்த்தனர். நீங்கள் இப்படி பேசுவதால் உங்கள் செல்வாக்கு குறைகிறது என்று பெரியாரிடம் தெரிவித்தனர். அதற்கு பெரியார் நான் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இதைச் சொல்லி வருகிறேன்; எனது செல்வாக்கு ஒன்றும் குறையவில்லை என்கிறார்.
எனக்கு எந்தவிதமான உணர்ச்சிக்கு இடம் இல்லாத மனத்தைப் பற்றி கவலை இல்லாத திராவிட மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எதுவும் இல்லை. போலியாக நடித்துக் கொண்டு நான்கு பேர் நல்லவர் என்று சொல்லும் அளவுக்கு எனது வாழ்க்கை அமையவில்லை.
அண்ணாவும் கருணாநிதியும் முதன் முதலாக ஒரு மிலாது நபி பொதுக்கூட்டத்தில் சந்தித்துக்கொண்டனர். முஸ்லிம்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் இன்று மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெரியார் இஸ்லாமியர்களின் அரசியலையும் ஆதரித்தார். இந்த விஷயத்தில் தான் பெரியார் காந்தியில் இருந்து வேறுபடுகிறார், காந்தி முஸ்லீம்களை ஆதரித்தார்.
ஆனால், அது அரசியல் ரீதியான ஒரு ஆதரவு அல்ல பெரியார் முஸ்லிம்களின் அரசியலையும் அவர்களின் சித்தார்த்தங்களையும் ஏற்றுக்கொண்டு ஆதரித்தார். திராவிட அரசியலில் முஸ்லிம்களுக்கு எந்தக் குறையும் இருக்காது. ஏனென்றால் திராவிட நாடு குறித்து பெரியார் பேச ஆரம்பிக்கும்போது முஸ்லிம்கள் எதிர்த்தனர். அதற்கு எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்று பெரியார் சொன்னார்.
இந்தியாவில் 25 விழுக்காடு முஸ்லிம்களுக்கு இந்த அரசில் உரிமை இருக்கிறதா, இல்லையா என்று பெரியார் அப்பவே கேள்வி கேட்டார். எனவே மாணவர்களாகிய நீங்கள் இந்தச் செய்தியை நிறைய பேரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று கூறினார்.
முன்னதாக இந்த கருத்தரங்கு நடைபெற இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் திராவிட கொள்கையை புகுத்துவதாக கூறி இந்து முன்னணி மாநிலச் செயலாளர்கள் குற்றாலநாதன் தலைமையில் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கடும் எதிர்ப்புக்கிடையே இந்த கருத்தரங்கம் அவசர அவசரமாக நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்து முன்னணி எதிர்ப்பை மீறி 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு