நெல்லை: என்.ஜி.ஒ காலனியின் உதயாநகர் பகுதியைச் சேர்ந்தவர், கணேசன் என்ற ஜோசப்ராஜ். இவரது மகள் விஜிலா ராணிக்கும் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவருக்கும்;
கரோனா ஊரடங்கு காலமான 2020 ஜூலை 15ஆம் தேதி திருமண புரோக்கர் இன்பராஜ் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின்போது, பெண்வீட்டார் சார்பில் 40 சவரன் தங்க நகைகளையும், 3 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த சில மாதங்களில் வின்சென்ட் பாஸ்கர் நகையை விற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது மனைவி விஜிலா ராணியுடன் அடிக்கடி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து விஜிலா ராணி தனது தந்தையிடம் இவ்விவகாரத்தைத் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
இதுபற்றி, உடனடியாக தந்தை கணேசன் பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தியதில், வின்சென்ட் பாஸ்கர் ஏற்கெனவே பல இளம் பெண்களை ஏமாற்றி, 5 முறை திருமணம் செய்தவர் என்றும்; அதே போன்று, விஜிலா ராணியையும் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.
இளம்பெண்களை ஏமாற்றி நகைப் பறிப்பு
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு வின்சென்ட் பாஸ்கரை தேடிவந்த நிலையில் காவல் துறையினர் திசையன்விளை அருகில் உள்ள சுவேசபுரத்தில் வைத்து, அவரைக் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சுவேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண்ணை தனக்கு தாயாகவும், தாமரைச்செல்வி என்ற பெண்ணை சித்தியாகவும் நடிக்க வைத்து புரோக்கர் கூறும் இடத்தில், பெண்களைப் பார்த்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார் .
இதனையடுத்து வின்சென்ட் பாஸ்கர் , மற்றும் பிளாரன்ஸ், தாமரைச்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள திருமண புரோக்கர் இன்பராஜை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
6 இளம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து கொண்ட இளைஞர் காவல் துறையிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: MullaiPeriyarDam: இப்போ 142 அடி; விரைவில் 152 அடி - அமைச்சர் துரைமுருகன் அறிக்கை