திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாவட்ட நூலகம் அருகில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது தந்தை பள்ளிக்கு வந்து மகனை அழைத்து சென்றார்.
தொடர்ந்து, பெற்றோர் மாணவரிடம் விசாரித்தபோது பள்ளியில் உள்ள விடுதி வார்டன் ராஜ்குமார், இதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர் ஆகிய இருவரும் சேர்ந்து விடுதியில் வைத்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு உதடு, கை விரல்கள், மார்பு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர் பரமக்குடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக மாணவனின் பெற்றோர்கள் நெல்லை மாகர காவல் துறையிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் இதுதொடர்பாக பரமக்குடி சென்று பாதிக்கப்பட்ட மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பேரில், தற்போது காவல் துறையினர் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன் ராஜ்குமார் மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவன் ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், விடுதி வார்டன் ராஜ்குமார் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.
அவருக்கு சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, ராஜ்குமாரை பள்ளி நிர்வாகம் சஸ்பென்ட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாணவனுக்குப் பாலியல் தொல்லை.. விடுதி வார்டன் சஸ்பெண்ட்!