திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாக விட்டுவிட்டு அவ்வப்போது மிதமான மழையும், சில நேரம் கன மழையும் பெய்துவருகிறது.
மாநகரில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஊற்று மூலம் வீடுகளில் நீர்
அந்தவகையில், பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்திற்குப் பின்புறம் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் கடந்த மூன்று நாள்களாக மழை நீர் முழங்கால் அளவிற்கு குளம்போல் தேங்கி நிற்கின்றது.
இந்தச் சூழலில், மேற்கண்ட மைதானத்தில் தேங்கிய நீரானது அருகிலுள்ள குடியிருப்பில் பூமிக்கு அடியில் ஊற்று மூலம் வடிந்து ஓடுகிறது. இதனால் செயின்ட் மார்க் தெருவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடந்த மூன்று நாள்களாக நீர் புகுந்து மக்கள் பெரும் சிரமப்பட்டுவருகின்றனர்.
சுகாதாரச் சீர்கேடு
நீரை பக்கெட்டில் பிடித்துப் பிடித்து மக்கள் வெளியே ஊற்றினாலும், மைதானத்தில் தேங்கிக் கிடக்கும் நீர் ஊற்று மூலமாக மீண்டும் வீட்டிற்குள் வருவதால் தற்போது நீர் துர்நாற்றம் வீசி கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, வீட்டிற்குள் தேங்கிய நீரில் மீன்கள், புழுக்கள் போன்றவை ஓடுவதால் மக்கள் அந்த வீட்டில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நீரை அகற்றவும் மேற்கொண்டு வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்துள்ளனர். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் தரப்பில் இதுவரை அப்பகுதியில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.