திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கலுங்குடியை சேர்ந்த சத்திராகுட்டி (28) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இரத்தினம் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாள்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரத்தினத்தின் மகன்கள் ஜெபக்குமார்(30), தர்மராஜ்(34), பெஞ்சமின்(28) மற்றும் ஜெபக்குமாரின் நண்பர் லட்சுமணன்(48) ஆகிய நால்வரும் இணைந்து சந்திரா குட்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட 4ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை (அக்.13) தீர்ப்பளித்த நீதிபதி விஜயகாந்த், வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்றஞ்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நால்வருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் துரைராஜ் வாதாடினார்.
இதையும் படிங்க: மனைவியை கொன்ற கணவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு