திருநெல்வேலி:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அதன் தாக்கமாக தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 75.30 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 4)ஒரே நாளில் 8.70 உயர்ந்து தற்போது நீர்மட்டம் 84 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 7,733.33 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1004.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை இன்று ஒரேநாளில் 17 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 117.78 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 38 அடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மணிமுத்தாறு, வடக்கு பச்சை யாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்து வருவதால் அணைகள் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 15 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க:மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!