திருநெல்வேலி: ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்டத்தில் முதற்கட்டமாக அக்.6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக அக்.9ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நெல்லை திமுக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி பதவிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று (செப்.21) வெளியிடப்பட்டது.
பாளையங்கோட்டை தியாகராஜ நகரிலுள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பட்டியலை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பதவியிடங்கள் உள்ளன.
76 இடங்களில் திமுக போட்டி
இதில், ஒன்பது இடங்கள் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்டது. இதில் எட்டு இடங்களில் திமுக போட்டியிடுகிறது. ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், பாளையங்கோட்டை ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் 89 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடம் உள்ளது.
இதில் 76 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் ஒன்பது இங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் கூட்டணிக் கட்சிகளுக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கு அமோக வெற்றி
தோ்தல் பொறுப்பாளராக அம்பாசமுத்திரம், நெல்லை தொகுதிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, ராதாபுரம் தொகுதிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிதை்துறை அமைச்சர் கீதாஜீவன், நாங்குநேரி தொகுதிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் எனவே நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்” என தெரிவித்தார். நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு - துரைமுருகன் அறிவிப்பு