திருநெல்வேலி: நெல்லையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதேபோல் ஏரி குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்றும் தொடர்ந்து நெல்லை மாநகர் பகுதியில் பகல் முழுவதும் அவ்வப்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இந்த தொடர் மழையால் மாநகர் பகுதியில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதற்கிடையில் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு வாரம் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் இருந்து வடியும் மழை நீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலில் தண்ணீர் புகுந்ததால், சுவாமி சிலை வெளியே எடுத்து செல்லப்பட்டன.
பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தெரிவித்தார்.
அப்போது, கொக்கிரகுளம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன், கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆற்றின் இரு கரைகளிலும் நீர் செல்வது குறித்தும், கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ