தமிழ்நாட்டில் கரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 விழுக்காடு இருக்கைகளுடன் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளை இயக்கலாம் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (நவம்பர் 10) திரையரங்குகள் திறக்கப்படும் என்று உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால், படங்கள் கிடைக்காததால் திருநெல்வேலியில் திரையரங்குகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திரையரங்கை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தாலும் கூட, சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் புது படங்கள் வெளியிட போவதில்லை என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனவே ரஜினி, அஜித் உள்ளிட்டோர் நடித்த பழைய படங்களை வைத்து திரையரங்குகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், நெல்லை மாவட்டத்தில் பழைய படங்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு படத்தை மட்டும் வழங்கிவிட்டு அனைத்து திரையரங்குகளிலும் அந்த படத்தை திரையிட வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஒட்டுமொத்தமாக இன்று திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
நெல்லை மாநகரில் மட்டும் ஐந்து திரையரங்குகள் உள்ள நிலையில், அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில், இரண்டாம் குத்து உள்பட சிறிய பட்ஜெட் படங்களை தீபாவளிக்கு வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால், வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) முதல் நெல்லை மாவட்டத்தில் திரையரங்குகளை இயக்கப்போவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.