திருநெல்வேலி : திருநெல்வேலி, கோடீஸ்வரன் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். கடந்த ஜூலை, 20ம் தேதி தனது வீட்டில் புதிய மின் மீட்டர் பொருத்தும் போது, அந்த மீட்டரில் ஏற்கனவே, 1000 யூனிட் மின்சார பயன்படுத்தப்பட்டதாக அளவீடு இருந்துள்ளது. பின்னர், இரண்டு மாதம் கழித்து, மின் கட்டணத்திற்காக கணக்கெடுத்த போது, அபுபக்கர் சித்திக் 1,680 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளதாக மின் மீட்டர் காட்டியது.
இந்த நிலையில், மின் கட்டணம் வசூலின் போது, ஏற்கனவே மீட்டரில் இருந்த 1000 யூனிட்டை கழிக்காமல், மொத்தமாக 1,680 யூனிட்டுக்கான தொகையை மின்வாரிய ஊழியர்கள் வாங்கியுள்ளனர். இதுகுறித்து, பேட்டை மின் பகிர்மான உதவி மின் பொறியாளர், நகர்புற செயற்பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் ஆகியோரிடம் அபுபக்கர் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.
கூடுதல் கட்டண வசூலால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அபுபக்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று (அக்.14) நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி தேவதாஸ், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம், வழக்குச் செலவு ரூ.5000, மனுதாரரிடம் கூடுதலாக வசூல் செய்த மின்கட்டணத் தொகை 2 ஆயிரத்து 277 ரூபாயையும் சேர்த்து, மொத்தமாக 22 ஆயிரத்து 277 ரூபாயை பாதிக்கப்பட்டவருக்கு எதிர்மனுதாரர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும். இழப்பீடு தொகையினை ஒரு மாத காலத்திற்குள் வழங்கத் தவறினால் 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை விவகாரம்: பிணை கோரிய ரகு கணேஷ் வழக்கு ஒத்திவைப்பு!