திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரான் தலைமையில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கோஷம் எழுப்பினர். பின்னர் மனு அளிப்பதற்காக அனைவரும் உள்ளே செல்ல முயன்றபோது காவல்துறையினர் நுழைவாயிலின் கதவை இழுத்து மூடி தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் எழுந்தது.
காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கண்ணபிரான் உள்ளிட்ட சிலரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். இருப்பினும் மனு அளிக்க உள்ளே சென்றவர்கள் திரும்பி வரும்வரை அனைவரும் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவாயிலில் குவிந்து நின்றதால் தொடர்ந்து பரபரப்பு நிலவியது.
அந்த மனுவில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளன் உள்ளிட்ட ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கவும், அந்தப் பெயரிலேயே சாதிச் சான்றிதழ் வழங்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர். சுமார் 20 நிமிடம் கழித்து மனு அளித்து விட்டு வெளியே வந்த பிறகே அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சில மணி நேரத்திற்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: மாஸ்க் அணியாமல் வந்த தம்பதியிடம் சாதிப் பெயரைக் கேட்ட காவலர் - பணியிடமாற்றம்