திருநெல்வேலி: ஊழல் என்ற வார்த்தை மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒன்றிப்போனதாக மாறிவிட்டது. அரசு நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், தனியார் சேவைகளுக்குக் கூட ஊழல் கொடுக்க வேண்டிய கட்டாயம் நிறைந்த கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு வகையில் ஊழலால் பாதிப்புக்குள்ளாகிறான்.
ஊழலை ஒழிக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தனிப்பட்ட மனிதர்கள் முழக்கம் விடுத்து வருகின்றனர். குறிப்பாக அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை அரசு அலுவலகத்துக்குள் நுழைவதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலைக் கூட மக்கள் எதிர்கொண்டுதான் வருகின்றனர். பிறப்புச்சான்று தொடங்கி இறப்புச்சான்று வரை அனைத்து சான்றிதழ்களுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதாகத் தொடர் புகார்கள் வருவதைப் பார்க்க முடிகிறது.
அதிலும் அரசு அலுவலர்களைப் பொறுத்தவரை என்ன தான் அவர்கள் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிகபட்சமாக, அவர்களுக்கு இடமாறுதல், பணியிடை நீக்கம் ஆகிய சிறிய தண்டனைகளே கிடைக்கின்றன. இதனால், அலுவலர்கள் மத்தியில் ஊழல் செய்வதில் பெரிய அளவில் பயமோ, தயக்கமோ இதுவரையில் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, ஊழல் செய்யும் அலுவலர்களை உடனடியாக வேலையை விட்டுத் தூக்க வேண்டும் என்பது ஒவ்வொரு சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையில் நடந்த ஊழல்: ஆனால், அதுபோன்று நடப்பது அரிதிலும் அரிது. இந்த நிலையை, சாமானிய மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு உயிரூட்டும் வகையில் நெல்லை மாவட்டத்தில், ஊழல் செய்த அலுவலரின் சீட்டை கிழித்து மாஸ் காட்டியுள்ளார், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் தான், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
![வங்கி பரிவர்த்தனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-04b-corruptionofficerdismiss-splstory-images-7205101_01042022071229_0104f_1648777349_571.jpg)
அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குட்பட்ட கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்தில் செயலாளராகப் பணிபுரிந்து வந்த பாலசுப்ரமணியன் என்பவர் பணியே செய்யாத ஒப்பந்ததாரர்கள் மூன்று பேரின் வங்கிக் கணக்கில் ரூ.17 லட்சம் வரவு வைத்து, அந்த பணத்தைக் கையாடல் செய்ய முயன்றுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை: இதுதொடர்பாக அந்த மூவரில் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கவே இந்த விஷயம் வெட்ட வெளிச்சமானது. மேலும், அப்போதைய ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலோ ஜோசப் ஆரோக்யதாஸ் என்பவர் இந்த முறைகேட்டுக்குத் துணை போனதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்ததோடு மட்டுமில்லாமல் இடமாறுதலும் வழங்கி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை மேற்கொண்டார்.
![பணிநீக்கம் செய்யப்பட்ட லயோலோ ஜோசப் ஆரோக்யதாஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14901488_nellaiee-3.jpg)
திடுக்கிடும் தகவல்கள்: மேலும், அத்தோடு விட்டுவிடாமல் இந்த முறைகேட்டின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள உதவிய திட்ட அலுவலர் சுமதி தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது, ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த சந்தோஷ்குமாரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றியவருமான லயோலோ ஜோசப் ஆரோக்யதாஸ் இருவரும் இணைந்து இதுபோன்று பல பஞ்சாயத்துகளில் நடைபெறாத வேலைகளுக்குப் பணம் ஒதுக்கி அந்த பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அரசு அலுவலர் தற்கொலை: கமிட்டி விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே, பொறியாளர் சந்தோஷ்குமார் திடீரென ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பொறியாளர் சந்தோஷ்குமார், லயோலோ ஜோசப் ஆரோக்யதாஸ் ஊழல் பழியை ஏற்றுக்கொள்ளும்படி கொடுத்த அழுத்தம் காரணமாகவே, தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால், லயோலா ஜோசப் ஆரோக்யதாஸுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் அதிரடி முடிவு: இதற்கிடையில் லயோலோ ஜோசப் ஆரோக்யதாஸ் பதவி உயர்வில் நெல்லை ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் இந்த விவகாரத்தில் நடைபெற்ற அனைத்து முறைகேட்டையும் கமிட்டி அதிகாரி அறிக்கையாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் அளித்தார். அறிக்கையைப் பார்த்து அசந்துபோன ஆட்சியர் விஷ்ணு, (மார்ச்.28) லயோலோ ஜோசப் ஆரோக்யதாஸை அதிரடியாக (Dismiss) பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
![மாவட்ட ஆட்சியரின் உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14901488_nellaiee-1.jpg)
இதைக் கேள்விப்பட்ட ஒட்டுமொத்த ஆட்சியர் அலுவலக வட்டாரமும் ஆடிப் போய் உள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட லயோலோ ஜோசப் ஆரோக்யதாஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும் அரசு நலவாரிய ஒன்றியத் தலைவருமாக உள்ளவரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. எனவே, தன்னைக் காப்பாற்றும்படி சபாநாயகர் அப்பாவு மூலம் காய் நகர்த்தியதாகத் தெரிகிறது.
மாவட்ட ஆட்சியரின் துணிச்சலும்; மக்களின் பாராட்டுகளும்: ஆனால், லயோலா ஆரோக்யதாஸின் முறைகேடு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், இதில் தலையிட சபாநாயகர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் இந்த துணிச்சலான நடவடிக்கை, அந்த மாவட்டம் மட்டுமல்லாது அனைத்து மாவட்ட மக்களிடையேயும் பெரும் பாராட்டுகளினைப் பெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு நிர்வாக வரலாற்றில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஊழல் செய்த அலுவலர் பணி நீக்கம் செய்யப்படுவது, இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆட்சியரின் இந்த நடவடிக்கை வரவேற்கக் கூடியது. அவரது பணி சிறக்கட்டும். இதுபோன்று செய்தால் தான் தவறு செய்யும் அலுவலர்கள் பயப்படுவார்கள்; ஊழலை ஒழிப்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும்’ என்றனர்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு