திருநெல்வேலி: நாங்குநேரி ஒன்றியம், திசையன்விளை அருகே உள்ள வெங்கட்ராயபுரம் பஞ்சாயத்தில் இன்று (அக்.9) ஊராட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் காவல்துறையின் அனுமதியின்றி பந்தல் அமைத்து பொதுமக்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பூத் முகவர்களுக்கு உணவு அளித்தார்.
வாக்குவாதம்
இதனையறிந்த வடக்கு விஜயநாராயண காவல்நிலைய காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு சென்று சாப்பிட வைத்திருந்த உணவை கீழே கவிழ்த்து, யாரும் சாப்பிட முடியாத வகையில் மணலை போட்டனர்.
சம்பவ இடத்தில் பொதுமக்கள், “சுயேச்சை வேட்பாளர் செய்தது தவறாக இருந்தாலும் சாப்பிட வைத்திருந்த உணவில் மணலை அள்ளிபோட்டது மகா தவறு” என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்து காவல்துறையினரை சிறைப்பிடித்தும் தேர்தலை புறக்கணித்தனர்.
கொந்தளித்த பொதுமக்கள்
இதனையறிந்த நாங்குநேரி ஏ.எஸ்.பி. ராஜத் சதுர்வேதி தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது உணவில் மணலை அள்ளிப்போட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் காவலரை விடுவித்து கலைந்து சென்றனர்.