திருநெல்வேலி : திருநெல்வேலியில் மழை பாதிப்புகளை பார்வையிட டிராக்டர் ஓட்டி வந்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அவர் அங்கிருக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நெல்லை மாநகர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் இன்று (நவ.27) இரண்டாவது நாளாக மழை நீர் வடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக நெல்லை டவுன் காட்சி மண்டபம் தொண்டர் சன்னதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அருகிலுள்ள கண்டியபெரி மற்றும் கிருஷ்ண பேரி ஆகிய குளங்களில் இருந்து வெளியேறிய நீர் ஊருக்குள் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

டவுண் முழுவதும் சாலைகள் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை தனது தொகுதிக்குள்பட்ட டவுணில் ஏற்பட்டுள்ள மழைநீர் பாதிப்புகளை பார்வையிட அங்கு சென்றார்.
அப்போது சில தெருக்களில் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக டிராக்டர் வண்டியை வரவழைத்து அவரே அந்த வண்டியை ஓட்டியபடி பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜக வெற்றி பெற்ற தொகுதி என்பதால் டவுண் பகுதி புறக்கணிக்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க : குண்டும் குழியுமான சாலைகள், உண்ணாவிரதம் இருப்பதை தவிர வேறு வழியில்லை.. நயினார் நாகேந்திரன்!