திருநெல்வேலி: வள்ளியூர் அருகே பாஜக உறுப்பினர் ஒருவரை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கடுமையாக தாக்கியதாகவும், இதில் காயமடைந்த அந்த பாஜக பிரமுகர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நெல்லை மாவட்ட பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக பிரமுகரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து, பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் 12ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து எங்கள் கட்சியை சேர்ந்த பாஸ்கர் பரப்புரை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த பாஸ்கரை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் அடியாள்கள் அழைத்துச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தற்போது பாஸ்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த போது அவரை உடனடியாக மருத்துவரை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்துள்ளது. அடிபட்டு காயத்தில் இருக்கும் நோயாளியை காப்பாற்றாமல் நாடாளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதில் மருத்துவமனை தீவிரம் காட்டுகிறது.
அடித்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எடுத்து சென்றுள்ளார். எனவே அந்த ஆதாரங்களை காவல்துறை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.