அய்யா வைகுண்டர் இப்புவியில் 1008ஆம் ஆண்டு மாசி மாதம் 20ஆம் தேதி அவதரித்தார். இவர் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தெய்வங்களின் ஒரே பொருளாக நம்பப்படுகிறார்.
அய்யா வைகுண்டர்
இவருக்குப் பெற்றோர்கள் முடிசூடும் பெருமாள் என நாமகரணம் சூட்டினார்கள். ஆயினும் திருவிதாங்கூர் சமாஸ்தானத்தில் நிலவிய சாதிக் கொடுமையால், இவரை முத்துக்குட்டி என்று அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் கடும் தவம் செய்து, பல சோதனைகளை கடந்து மக்களைக் காத்தவர்.
அய்யா வைகுண்டருக்கு இறை அருள் கிடைத்தது திருச்செந்தூர் திருக்கடலில். மற்ற அவதாரங்களில் ஆயுதங்கள் ஏந்தி அசுரர்களை அழித்த இறைவன், இக்கலியில் மனித உருவில் ஆண்டிக் கோலமிட்டு அன்பால் தீமைகளை அழிக்கலானார்.
அகிலத்திரட்டு அம்மானை
திருவிதாங்கூர் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து சாதாரண மக்களைக் காத்து, சமத்துவ சமுதாயம் அமைய வழி செய்தவர் வைகுண்டர். இவர், ‘அகிலத் திரட்டு அம்மானை’, ‘அருள் நூல்’ எனும் இரு அரிய பொக்கிஷங்களை அருளியிருக்கிறார். (இந்த நூல்கள் அய்யாவின் அருளால் சீடர்கள் எழுதியது).
அவற்றில் இடம்பெற்றிருக்கிற கணிப்புகள் மெய்வாக்காக அப்படியே பலித்து வருகின்றது. ‘முள்ளு முனையதிலே குளம் வெட்டி வயலும் பாய்ச்சி முன்மடை பாயக் கண்டேன்’ என்கிற வரி, இன்றைய ஆழ்துளைக் கிணறை நினைவுப்படுத்துகிறது.
முக்கால ரகசியம்
முப்போகம் விளைந்து வரும் நஞ்சை நிலங்களை ‘உவர்’ பொங்கி அழிக்கும் என தெளிவாகச் சொல்லி இருக்கிறார். வைகுண்டரின் திருவாக்குகளில் ஒன்று. ‘கனத்த பூமி வெடிக்குதடா’ என்பதாகும். இது, நில அதிர்ச்சியை உணர்த்துகிறது.
அதேபோல -‘காடு நாடாகுமென்று நாரணன் சொன்ன சொல் காலமும் சரியாச்சே!’... எனவும், ‘நாடெல்லாம் காடாகும்’ என்றும் சொல்லி இருக்கிறார். அவை நாளும் மெய்யாகி வருகின்றது.
உலக அழிவுகள்
‘அண்டபகிரண்டம் வெல்லவொரு ஆயுதம் வந்திருக்குதப்பா’ என்பது சீறிப் பாய்ந்து- கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது. பெருமழை குறித்து வைகுண்டர் பாடிய தீர்க்கதரிசன வாசகங்களும் இப்போது 21-ம் நூற்றாண்டில் அப்படியே பலித்திருக்கின்றன.
‘காளி வெள்ளம் வருகிறது; கப்பல் செய்து வைத்திருங்கோ’ மற்றும்... ‘மாரி வெள்ளம் அழிக்குதடா; மாயாண்டி சொல்லுகிறேன்’ போன்ற வரிகள் அதற்கு துல்லியமான சான்றுகளாகின்றன. ‘மாரி’ என்கிற மழை வெள்ளத்தால் பேரழிவு நேர்ந்திருக்கிறது.
காளி போல் வெள்ளம் ஆவேசமாக பெருக்கெடுத்து அழித்தது. சென்னை நகருக்கு படகில் நிவாரணப் பொருட்களும் வந்தன. வைகுண்டரின் பாடல் வரிகளில் இன்னும் எவ்வளவோ அற்புத ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.
அய்யா வழி விளக்கம்
அவை பல எச்சரிக்கைகளை உலகுக்கு உணர்த்துகின்றன. அய்யா வைகுண்டரின் வாழ்வுக்கு பல வரலாற்று ஆவணங்கள் உள்ளன. ‘அய்யா வழி’யை ‘அன்பு வழி’ என்றும் குறிப்பிடுகிறார்கள். ‘அய்யா’ என்றால் தந்தை, தலைவன், குரு என பொருள்படும்.
‘வழி’ என்றால் பாதை. எந்தவித பாரபட்சமும் காட்டாமல், சக மனிதர்களிடம் அன்போடு வழி நடப்பதையே இந்த வழிபாடு வலியுறுத்துகிறது. இது அருவ-சைவ வழிபாட்டு முறையாகும். இதன் தலைமை வழிபாட்டுத் தலம், வைகுண்டர் அமர்ந்து அருள்பாலித்த சுவாமிதோப்பில் உள்ளது.
அதன் துணைத் தலங்கள், தமிழ்நாட்டில் எண்ணற்ற இடங்களில் இருக்கின்றன. சென்னை, மும்பை, வெளிநாடுகளிலும் ‘அய்யா வழி’ வழிபாடு பரவி வருகிறது.
சாதிக் கொடுமைகள்
அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி, நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன. திருவிதாங்கூர் மன்னன் குறிப்பிட்ட சில மக்களை பல்வேறு கொடுமைகளுக்குட்படுத்தி ஆட்சி புரிந்துவந்தார்.
குறிப்பிட்ட சமூகப் பெண்கள் தங்கள் தோளில் சேலை போடக்கூடாது, இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது. கழுத்தில் தங்கத்தாலி இருக்கக் கூடாது. ஆண்கள் மீசை வைத்தால் குற்றம், பனை ஏறினால் வரி.
முட்டுக்கு கீழே வேட்டி, இருபாலரும் காலில் செருப்பு அணியக் கூடாது. உயர் சாதியினரின் தெருக்களில் நடக்கக்கூடாது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்றெல்லாம் பல்வேறு கட்டுப்பாடுகள் அப்போது விதிக்கப்பட்டிருந்தது.
கொடுமைகள்
குறிப்பாக தலைப்பாகை அணிவது பெருங்குற்றம். இதை அய்யா வைகுண்ட சுவாமிகள் கடுமையாக எதிர்த்தார். (தலைபாகை அணியாமல் அய்யா பதிக்குள் தற்போது அனுமதி கிடையாது). சாமானிய மக்களின் உரிமைகளைக் காத்தார். நோய் நொடியோடு வந்தவர்களுக்கு திருநாமத்தாலும், தண்ணீராலும் பிணிகள் போக்கினார். இதனால் அவரது பெருமை நாடெங்கிலும் பரவியது.
மக்கள் வந்து வணங்கி, பலன் பெற்றுச் சென்றனர். இதைப் பொறுக்காத மன்னன், அவரை கட்டி இழுத்து வரும்படி தனது படை வீரர்களை அனுப்பினான். வழியெங்கும் கொடுமைப்படுத்தியபடியே குதிரையில் கட்டி இழுத்துப்போனார்கள் காவலாளிகள்.
பணிந்த புலி
அரண்மனைக்கு இழுத்துச் சென்றதும் மன்னனுக்கு சிறிது அச்சம் தொற்றிக்கொள்ள வந்திருப்பது சாமியா? என்று அறிய நினைத்தான். மன்னனின் மனதை அறிந்த அய்யா வைகுண்டர், நாட்டில் தர்மயுகம் மலர அவனது சோதனைக்கு தயாரானார்.
மன்னனின் கேள்விக்கு பதிலளிக்காத அய்யாவை, அந்த மன்னன் சித்ரவதை செய்து கொல்ல ஆணையிட்டான். மன்னனின் உத்தரவையேற்று காவலர்கள் அய்யாவை, சுண்ணாம்புக் காளவாசலில் தூக்கிப் போட்டார்கள்.
அதன் பின்னர் மிளகாய் வற்றல் புகையிலும், நெருப்பிலும் தள்ளினார்கள். இறைவன் மலர்ந்த முகத்தோடு வெளிப்பட்டார். கடைசியில் பசித்த புலி முன்னே அடைத்தார்கள். புலி, பாயவில்லை. பணிந்து நின்றது.
முத்திரிப் பதம்
அப்போதுதான் திருவிதாங்கூர் மன்னனுக்கு புத்தி வந்தது. தான் தண்டிக்க நினைத்தது மனிதனை அல்ல. மாலவனை என்பதை உணர்ந்தான். மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு வணங்கினான். ஆண்டிக் கோலம் கொண்ட அய்யா வைகுண்டர், சாமானிய மக்களின் வாழ்வு செழிக்க வேண்டி, சுவாமிதோப்பில் தவம் மேற்கொண்டார்.
அந்த மண்ணில்தான் அவர் அருளிய ‘அன்பு வழி’யின் தலைமைப் பதி இருக்கிறது. அருகில் அவரால் உருவாக்கப்பட்ட முத்திரி கிணறு உள்ளது. இதில் நீர் இறைத்து நீராடி, வைகுண்டரை வழிபட்டால்... தீராத நோய்கள் தீரும். துன்பங்கள் அகலும். இல்லத்தில் இனிமை மலரும். தாமரை மலருடன் கூடிய திருநாமமே அய்யா வழியின் சின்னமாக இருக்கிறது. அருவ வழிபாடு இதன் இன்னொரு சிறப்பு.
ஊர்வலம்
இன்று மாசி 20-ஆம் தேதி (மார்ச்3) அய்யா வைகுண்டரின் 188-ஆவது அவதார தினம். இன்று சுவாமிதோப்பில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து சுவாமிதோப்பு நோக்கி நடக்கும் ஊர்வலம் மிக மிக பிரசித்தம்.
இதேபோல் திருச்செந்தூரிலும், அய்யா வைகுண்டர் கால்நாட்டிக் கொடுத்த நெல்லை மாவட்டம் கடம்பன்குளம் மற்றும் இதர ஊர்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.