திருநெல்வேலியை சேர்ந்த தம்பதி சண்முகம்(85), பொன்னம்மாள் (78). அவர்களது பிள்ளைகளும், உறவினர்களுகம் கைவிட்ட நிலையில் இருவரும் தனியாக வசித்துவருகின்றனர். இதனிடையே சண்முகம் உடல் குறைவால் வீட்டில் முடங்கியதால், பொன்னம்மாள் வீட்டு வேலை செய்து அவரை பராமரித்து வந்தார். இந்த நிலையிலேயே, கரோனா தொற்று காரணமாக பொன்னம்மாளுக்கு வேலை பறிபோனது. அதன்பின் இருவரும் சோயா தொண்டு நிறுவனம் மூலம் இருவரும் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் அங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு 60ஆம் கல்யாணம் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். இதையறிந்த சோயா தொண்டு நிறுவன தலைவர் சரவணன் இருவருக்கும் மணிவிழா நடத்த முடிவெடுத்துள்ளார்.
அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் சரவணன் தொல்.திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சண்முகம்-பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா ஏற்பாடு செய்ய பொறுப்பேற்றார். இதையொட்டி இருவருக்கும் புத்தாடைகள், மாலைகள் வழங்கப்பட்டன. அதன் பின் சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும்போது, ”எங்கள் கட்சித் தலைவர் பிறந்தநாளில் ஆதரவில்லாத இத்தம்பதிக்கு மணி விழா நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது.
எனது அம்மா இறந்து விட்டார், அவருக்கு இதுபோன்று மணி விழா நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன் முடியவில்லை. இவர்களை எனது தாய் தந்தையாக நினைத்து இந்த மணி விழா நடத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து சண்முகம் கூறும்போது, ”இரண்டு ஆண்டுக்கு முன் இந்த இல்லத்துக்கு வந்தேன் எனது மனைவி வீட்டு வேலை செய்து வந்தாள், கரோனா அவருக்கு வேலை இல்லாமல் போனது இங்கு வந்த பிறகு எனக்கு கண் சிகிச்சை அளித்து பார்வை கொடுத்துள்ளனர். 60ஆம் கல்யாணம் நடக்க வேண்டுமென்று ஆசைபட்டோம். ஆனால் அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. திடீரென உங்களுக்கு மணி விழா நடத்த போகிறோம் என்று கூறியதும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது திருமணம் கூட இந்த அளவுக்கு நடக்கவில்லை. அதை விட சிறப்பாக எனது மணி விழா நடத்தியுள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாயில்லா ஜீவன்களை வாழவைக்கும் ராஜா... யார் இவர்..? - சிறப்புத்தொகுப்பு!