திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதில், குறிப்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காவல்துறை மீது பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் தவறான செயல்களுக்கு துணை புரியும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கையை மீறி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், மூலைக்கரைப்பட்டி காவல் நிலைய தலைமைக் காவலர் ஒருவரை சமீபத்தில் அதிரடியாக இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் ஐந்து காவலர்களை நேற்று (செப்.23) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு உதவிக் காவல் ஆய்வாளர் கருத்தையா, தலைமைக் காவலர் சுதாகர், காவலர்கள் ரத்தினவேல் முண்டசாமி, லட்சுமிநாராயணன் உள்ளிட்ட ஐந்து பேர் மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டது மணிவண்ணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தற்போது ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்து அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருநெல்வேலியில் அடுத்தடுத்து மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வரும் சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.