திருநெல்வேலி மாவட்டம், டவுண் பாட்டபத்து வீரவாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(44). இவரது மனைவி காந்திமதி (40). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், ராதாகிருஷ்ணன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக, தினமும் மது அருந்திவிட்டு மகள்கள் தூங்கும் முன்பே மனைவியை உடலுறவில் ஈடுபட வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி இரவில் ராதாகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு காந்திமதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காந்திமதி, துணியால் கழுத்தை நெறித்து தனது கணவர் ராதாகிருஷ்ணனை கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக டவுண் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி காந்திமதியை கைது செய்தனர்.
மனைவிக்கு ஆயுள்:
நெல்லை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நேற்று (டிச.16) நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், கணவரை கொலை செய்த காந்திமதிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து காந்திமதி பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டப்படி காந்திமதி செய்தது குற்றமாக இருப்பினும், கணவரையே கொலை செய்யும் அளவுக்கு, மது போதைக்கு அடிமையான ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மூன்று குழந்தைகளுக்கு எவ்வளவு தொல்லையாக இருந்திருப்பார் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. மொத்தத்தில் மதுவால் தாய், தந்தையை இழந்துவிட்டு தவிக்கும் மூன்று குழந்தைகளின் நிலையைக் கண்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் வருந்தினர்.