தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டல மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது . சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளில் உள்ள மது பானங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கிற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் நாளை மதுபான கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாகனங்கள் மூலம் காவல் துறையினரின் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணிவரை திறக்கப்படுவதால் போலீசார் பாதுக்காப்புடன் மதுபான கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க வருபவர்கள் கட்டாயம் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அப்படி வராதவர்களுக்கு மதுபானங்கள் கொடுக்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 216 மதுபானக் கடைகளில் 168 கடைகள் திறக்கப்படுகிறன.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 48 கடைகள் திறக்கப்படுவதில்லை என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாநகர பகுதிகளில் 45 மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளன. ஆனால், சேலத்தில் கரோனோ வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் இருக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 22 கடைகள் திறக்கப்படாது என்று டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
ஊரடங்கில் மது விற்பனை - டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்