சேலம்: தமிழ்நாடு சட்டபேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்.6) நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நான்கு மையங்களில் வரும் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் அம்மாபேட்டை கணேஷ் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் சங்ககிரி விவேகானந்தா கல்லூரி மையத்திலும்; ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய இரு தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் ஆத்தூர் அருகே உள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் ஆயுதப்படை காவல்துறையினரும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அஞ்சல் வாக்கு எனத் தவறாகப் பதிவானதால் வாக்களிப்பதில் சர்ச்சை