சேலம் மாநகர எல்லைக்குள்பட்ட குகை பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக சாயப்பட்டறைகள் இயங்கிவருவதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
தொடர்ந்து, சேலம் அடுத்த களரம்பட்டியில் உள்ள ஜி.கே. கலர்ஸ் சாயப்பட்டறையிலிருந்து சாயக் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும் அது திருமணிமுத்தாற்றில் கலந்துவிடப்படுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடம் சென்ற அலுவலர்கள், ஜி.கே. கலர்ஸ் சாயப்பட்டறையை இடித்து அகற்றியதோடு ஆலைக்கு வழங்கப்பட்டுவந்த மின்சார இணைப்பையும் துண்டித்தனர். மேலும், ஆலை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
இதேபோல், சீலநாயக்கன்பட்டியில் இயங்கிவந்த வெங்கடேசன் டையிங், களரம்பட்டி வெங்கடதாஸ் டையிங், ஸ்ரீ கணேஷ் டையிங் ஆகிய சாயப்பட்டறைகளும் அகற்றப்பட்டன.